கேதார்நாத் கோவிலுக்குச் செல்ல
புதிய 'ரோப் கார்' திட்டம் அறிமுகம்
டேராடூன்: கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் நேரத்தைக் குறைக்கும் வகையில் 'ரோப் கார்' திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர். உத்தராகண்ட் மாநிலத்தின் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகே கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ள இவ்கோவிலைச் சென்றடைய உயரமான, செங்குத்தான பனிமலையில் எட்டு மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை நடந்து கடக்க இவ்வளவு நேரமாகிறது. இந்நிலையில், 'ரோப் கார்' திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயண நேரம் 25 நிமிடமாக குறைந்துவிடும்.
தானியங்களைப் பயிரிட ஊக்குவிக்கும் திட்டம்: ஒடிசா முதல்வருக்குப் பாராட்டு
புவனேஸ்வர்: ஒடிசாவில் தானியங்களை அதிகம் பயிரிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, 'மில்லட் மிஷன்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தண்ணீர் அதிகம் தேவைப்படாத தானியங்களை அம்மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் அதிக அளவில் பயிரிட முடிகிறது. தற்போது 19 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் 95 லட்சம் பழங்குடியினர் பலனடைந்துள்ளனர். இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் பாராட்டு தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 22 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக பதவி வகித்து வருகிறார் நவீன் பட்நாயக்.
137 ஆண்டுகளில் ஆறாவது முறையாக நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அக்கட்சி தொடங்கப்பட்ட 137 ஆண்டுகளில் தலைவர் பதவிக்காக நடைபெறும் ஆறாவது தேர்தல் இது. இம்முறை அக்கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். நாடு முழுவதும் உள்ள சுமார் ஒன்பதாயிரம் காங்கிரஸ் நிர்வாகிகள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மாற்றங்களுக்கான தலைமை வேண்டுமெனில், தம்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பிரசாரத்தின்போது வலியுறுத்தி இருந்தார் சசிதரூர். நேரடிப் போட்டி நிலவும் இத்தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகிய மூவரும் யாருக்கும் தனிப்பட்ட வகையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

