புதுடெல்லி: இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை, மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் உரிய பலனை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த 2016-17ஆம் ஆண்டுகளில் 128.66 பில்லியன் ரூபாய் மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு செலவிடப்பட்ட நிலையில், 2021-22ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் இந்தத் தொகையானது, 632 பில்லியன் ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருத்துவக் கையுறைகள் தொடங்கி செயற்கை சுவாசக் கருவிகள் வரை பல்வேறு மருத்துவக் கருவிகளை இந்தியா இறக்குமதி செய்கிறது.
கடந்த 2016-17ஆம் ஆண்டில் 18.42 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள, நோய்களைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள், மின்னணுக் கருவிகளை உள்ளடக்கிய மருத்துவ சாதனங்களை சிங்கப்பூரில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. தற்போது 2021-22ஆம் ஆண்டில் இத்தொகையானது ரூ.54.29 பில்லியனாக அதிகரித்துள்ளது.
மருத்துவ உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்திருப்பதை அடுத்து, உள்நாட்டில் அவற்றைத் தயாரிப்பதைக் காட்டிலும் இறக்குமதி செய்வது எளிதாக உள்ளதாக அத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ உபகரண தயாரிப்பாளர்கள்கூட இப்போது இறக்குமதியாளர்களாக மாறிவிட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எளிதில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களுக்கும்கூட இறக்குமதியை வெகுவாக சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, உலகின் முதல் நிலை ரப்பர் உற்பத்தியாளராக விளங்கும் இந்தியா, மருத்துவ பரிசோதனைக்கான கையுறைகளை மலேசியா, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்கிறது.
"நம் தேவைக்கு ஏற்ப உள்நாட்டில் கையுறைகளை உற்பத்தி செய்வதில்லை. மேலும் தரமும் குறைவாக உள்ளது. அனைத்தையும்விட முக்கியமாக, விலை அதிகமாக உள்ளது.
"எனவேதான் வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது," என்கிறார் இறக்குமதியாளர்களில் ஒருவர்.

