புதுடெல்லி: எதிர்வரும் 2047ஆம் ஆண்டு வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்காக இப்போது முதலே, மத்திய அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றான 'ஐஐடி' நிலையங்களை வெளிநாடுகளிலும் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் மங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது குறிப்பிட்டார்.
"அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா எரிசக்தி துறையில் முழுமை பெற்றுவிடும். அதன் பின்னர் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட துறையாக எரிசக்தி துறை செயல்படும்.
"எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கல்வி, தகவல்-தரவு பகுப்பாய்வு, முப்பரிமாண அச்சிடும் பணி, மரபணு திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது," என்றார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அனைத்துலக அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தரம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருவதாகத் தெரிவித்தார். "அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளிலும் ஐஐடிக்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்," என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் மேலும் கூறினார்.

