மணீஷ் சிசோடியா கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல்
புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று மீண்டும் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.
முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்ததற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் மதுபான ஆலை உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தி இருந்தனர்.
அதன் எதிரொலியாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்கு முன்னிலையாகுமாறு, அவருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பி இருந்தது. அதன் பேரில் அவர் நேற்று சிபிஐ அலுவலகத்தில் முன்னிலையானார்.
அதற்கு முன்னதாக, டுவிட்டரில் பதிவிட்ட அவர், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக தமது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 14 மணி நேரம் சோதனை நடத்தியதாகவும் அப்போது எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
"எனது வங்கி பாதுகாப்புப் பெட்டகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. எனது கிராமத்தில் இருந்து அவர்கள் எதையும் கைப்பற்ற முடியவில்லை. தற்போது என்னை சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். வாய்மையே வெல்லும்," என்று மணிஷ் சிசோடியா மேலும் தெரிவித்திருந்தார்.
நேற்று காலை சிபிஐ அலுவலகத்தில் தொடங்கிய விசாரணை, பல மணி நேரம் நீடித்தது. அதன் முடிவில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
மிக விரைவில் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியைவிட, ஆம் ஆத்மி கட்சிதான் பாஜகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ள நற்பெயரைச் சிதைக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே சிபிஐ மூலம் அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி தலைமை சாடியுள்ளது.

