ராய்ப்பூர்: நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
தினமும் மூன்று கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், இடைத் தரகர்கள் எனப் பலரும் கூட்டு சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
"இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தொழிலதிபர் சூர்யகாந்த் திவாரி தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த முறைகேடு தொடர்பாக சத்தீஸ்கரின் பல்வேறு நகரங்களில் கடந்த 11ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.
அதன் பிறகு கடந்த 13ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய் கைதானார். அதையடுத்து இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால், லட்சுமிகாந்த் திவாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நீடித்து வரும் நிலையில், மேலும் சிலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

