கேரளாவில் பத்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை நீடித்து வருவதை அடுத்து பத்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், காசர்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு காற்று வழக்கத்தைவிட பலமாக வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
'பட்டினிக் குறியீடு பட்டியல் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் முயற்சி'
புதுடெல்லி: அனைத்துலக பட்டினிக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 இடத்துக்கு தள்ளப்பட்டு இருப்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு உள்ள நன்மதிப்பை சீர்குலைக்கும் முயற்சி என மத்திய அரசு சாடி உள்ளது. அண்மையில் 121 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியல் வெளியானது. அதன்படி கடந்த ஆண்டு 101ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்தியா தற்போது ஆறு இடங்கள் சரிவுகண்டு 107ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சுவெளியிட்டுள்ள அறிக்கையில், போலி தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சாடியுள்ளது. "உலக அளவில் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் இத்தகைய முயற்சிகளை வேண்டும் என்றே புறக்கணித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நாட்டில் வெறும் மூவாயிரம் பேரிடம் மட்டும் கருத்து கேட்கப்பட்டுள்ளது," என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மகளிர் கல்லூரியின் சுவர் ஏறிக் குதித்த மாணவர்கள்: காவல்துறை விசாரணை
புதுடெல்லி: மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த கல்லூரி மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியில் தீபாவளியையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆடல், பாடல் என்று நிகழ்ச்சி களைகட்டிய நிலையில், கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கல்லூரி நுழைவு வாயிலை மூட கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், அருகில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் திடீரென பெண்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். நுழைவு வாயில் மூடப்பட்டிருந்தபோதும், கல்லூரி சுவர் மீதேறி குதித்து அம்மாணவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதையடுத்து ஆபாச முழக்கங்களை எழுப்பியதுடன் சில மாணவிகளுக்கு அம்மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் சுவர் ஏறிக்குதிக்கும் காணொளிப் பதிவு இணையத்தில் வெளியாகி, பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

