அமராவதி: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியினர் நடத்திய தாக்குதலில் முன்னாள் நடிகையும் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா உயிர் தப்பினார். இந்தத் தாக்குதல் காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.
ஆந்திர மாநிலத்துக்கு மூன்று புதிய தலைநகரங்களை அறிவித்துள்ளது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு. இதற்கு ஜனசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணி ஒன்றில் ரோஜா பங்கேற்றார். அதன் பின்னர் அவர் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தார். இந்நிலையில், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் பவன் கல்யாணும் விசாகப்பட்டினம் வர இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அவரது கட்சியினரும் விமான நிலையத்தில் திரளாகத் திரண்டிருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் ரோஜாவின் கார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜனசேனா தொண்டர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி தங்கள் கைவசம் இருந்த பதாகைகள், கொடிக் கம்புகள் ஆகியவற்றை ரோஜாவின் கார் மீதும் அதைப் பின்பற்றி வந்த ஆதரவாளர்களின் வாகனங்கள் மீதும் வீசி எறிந்தனர்.
இதில், ரோஜாவின் உதவியாளர் படுகாயமடைந்தார்.
மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் காயம் அடைந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக ஜனசேனா கட்சியை சேர்ந்த 25 பேர் கைதாகி உள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

