புதுடெல்லி: அண்டை நாடுகளின் ராணுவம், பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் விதமாக இந்திய எல்லையில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 80 வானூர்திகளை வாங்குகிறது இந்திய ராணுவம். எல்லைப் பாதுகாப்பை முன்வைத்து ஏற்கெனவே இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஹெரோன் வகை வானூர்திகளை இந்திய ராணுவம் வாங்கியுள்ளது. அவை தற்போது லடாக் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வானூர்திகளை வாங்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இந்த நவீன வானூர்தி மூலம் சுமார் 15 கிலோ வெடிபொருள்களைக் கொண்டு செல்ல முடியும். கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய, சீன ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லைப் பகுதியில் மோதல் வெடித்தது.
அதன் பின்னர், இருதரப்பும் எல்லையில் இருந்து துருப்புகளை திரும்பப் பெற்றதாக அறிவித்தாலும் லடாக்கில் பதற்றநிலை நீடித்து வருகிறது. அங்கு புதிய ராணுவ முகாம்களை அமைக்க முடியாது என்பதாலும் அதிக அளவில் வீரர்களைக் குவித்து வைக்க இயலாது என்பதாலும் ஆளில்லா வானூர்திகளின் தேவை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியைப் பாதுகாக்க இந்த வானூர்திகள் உதவும் என ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் சிறிய ரக ஆளில்லா உளவு வானூர்தியை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் அந்த வானூர்தி ஊடுருவ முற்பட்டது. இதையடுத்து அது சுட்டு வீழ்த்தப்பட்டது. பின்னர் அதைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, கறுப்பு துணிப்பையில் மர்மப்பொருள்கள் இருப்பதை ராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கடந்த ஐந்து நாள்களில் பஞ்சாப் எல்லையில் இரண்டு வானூர்திகள் இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் முப்படைகளின் பயன்பாட்டுக்காக சிறிய ரக மின்காந்த பீரங்கிகள் நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.

