ராஜஸ்தானில் வங்கி ஒன்றுக்குள் ஆயுதம் ஏந்திய திருடன் நுழைந்தான். அவன் கொள்ளையடிப்பதைத் தடுத்துநிறுத்தி அவனை வங்கியைவிட்டு ஓடச் செய்துள்ளார் அவ்வங்கியின் பெண் அதிகாரி. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
முகத்தைத் துணியால் மறைத்திருந்த திருடன் வங்கிக்குள் கத்தியுடன் நுழைந்தான். வங்கி ஊழியர் ஒருவரை பணம் கேட்டு அவன் மிரட்டினான். கூச்சலைக் கேட்ட பெண் அதிகாரி தனது அறையிலிருந்து வெளியே வந்து திருடனை விரட்ட முயன்றார். திருடன் மற்றொரு ஊழியரிடம் தன்னிடம் இருந்த பையில் பணத்தை நிரப்புமாறு வற்புறுத்தினான். அச்சமயம், அவனிடம் இருந்து 'பிளாயர்' எனும் பழுதுபார்க்கும் கருவி தரையில் விழுந்தது. பெண் அதிகாரி அதைச் சட்டென்று எடுத்து திருடனை நோக்கி காட்டினார். பயந்துபோன திருடன் வங்கியைவிட்டு ஓடினான். பெண் அதிகாரி வங்கியின் முன்வாசல் கதவை உடனடியாக தாழிட்டு காவல்துறையைத் தொடர்புகொண்டார்.
வங்கியின் அந்தப் பெண் அதிகாரி பூனம் குப்தா என அடையாளம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது வங்கியில் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் இருந்ததாகக் கூறப்பட்டது. அதிகாரியின் துணிவான செயலால் வங்கி கொள்ளையடிக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக வங்கி கூறியது

