அமராவதி: கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதன் விமானி உட்பட ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர்.
விபத்தில் பலியான பயணிகள் ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஆர்யன் தனியார் விமான நிறுவனம், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆன்மீகத் தலத்துக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவை அளித்து வருகிறது.
நேற்று இந்நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்லும் பக்தர்கள் ஏழு பேர் பயணம் மேற்கொண்டனர். காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில், விமானிகளுக்கான காட்சித் தெளிவும் குறைவாகவே இருந்துள்ளது.
எனினும் பக்தர்களுடன் பத்திரமாக கேதார்நாத் சென்றடைந்தது அந்த ஹெலிகாப்டர். பின்னர் அங்கிருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. எனினும் மேலெழுந்து பறந்தபோது, கருட் சாட்டி என்ற இடத்தில் மலைப்பகுதி ஒன்றில் மோதி அது விபத்துக்குள்ளானது.
இதையடுத்து மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். பனிமூட்டம் நிலவியதால் ஹெலிகாப்டரை இயக்குவதில் விமானி சிக்கலை எதிர்கொண்டதாகவும் அதுவே விபத்துக்குக் காரணம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஏழு பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

