புவனேஸ்வர்: கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாத இளையரை கயிறு மூலம் இருசக்கர வாகனத்துடன் சேர்த்துக் கட்டி, சாலையில் இழுத்துச் சென்றவர்களிடம் ஒடிசா மாநில காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கட்டாக் நகரைச் சேர்ந்த 22 வயதான ஜெகநாத் என்பவர் தமது பாட்டனாருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக ரூ.1,500 கடன் வாங்கி உள்ளார்.
அவருக்கு கடன் கொடுத்த இரு ஆடவர்கள் கடன் தொகையை முப்பது நாள்களுக்குள் தர வேண்டும் என நிபந்தனை விதித்ததாகத் தெரிகிறது. எனினும் இதை ஏற்றுக்கொண்ட ஜெகநாத்தால் குறித்த நேரத்தில் பணத்தைப் புரட்டி திருப்பித் தர முடியவில்லை.
இதையடுத்து, அவருக்கு கடன் கொடுத்த இருவரும் நேற்று முன்தினம் ஜெகநாத்தை சந்தித்தனர். அப்போது அவர் தம்மிடம் பணமில்லை என்று கூறியதால் ஆவேசமடைந்த இருவரும் ஜெகநாத்தின் கைகளில் 12 அடி நீள கயிற்றைக் கட்டி, அதன் மறுமுனையை இரு சக்கர வாகனத்துடன் கட்டினர்.
அதன் பின்னர் கடன் கொடுத்தவர்கள் அந்த வாகனத்தை ஓட்ட, கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், ஜெகநாத்தும் வாகனத்தின் பின்னே ஓடினார். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் இவ்வாறு ஓடினார் ஜெகநாத்.
எனினும் வழியில் தென்பட்ட காவல்துறையினர் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அவர்கள் ஜெகநாத் இழுத்துச் செல்லப்படுவதை வேடிக்கை மட்டுமே பார்த்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின்னர் ஜெகநாத் விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, விவாதங்களை எழுப்பியுள்ளன.
இதற்கிடையே, ஜெகநாத்தை துன்புறுத்திய இருவரும் ஒடிசா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

