புதுடெல்லி: பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதாக குஜராத் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சின் அனுமதியைப் பெற்ற பிறகே குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டதாக குஜராத் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. அப்போது ஏராளமான அப்பாவி மக்கள் தாக்கப்பட்டனர். பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
வன்முறையாளர்கள் அவரது கண் முன்பே அவருடைய மூன்று வயது மகள், உறவினர்கள் என ஏழு பேரைக் கொன்று குவித்தனர். இது தொடர்பாக பில்கிஸ் பானு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைதாகினர்.
2008ஆம் ஆண்டு குற்றவாளிகள் 11 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் கோத்ரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 11 பேரையும் குஜராத் அரசு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவித்தது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு குற்றவாளிகள் விடுதலை தொடர்பான விவரங்களை அடுத்த இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என குஜராத் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு நேற்று தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.
அதில், நன்னடத்தை காரணமாகவே 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சு இதற்கு அனுமதி அளித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

