புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட தரமற்ற மருந்துகளை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து அந்த மருந்துகள் குறித்த விவரங்களை அவ்வாரியம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 59 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மருந்துகள் விற்கப்படுகின்றன. அவை அனைத்தையும் மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்வது வழக்கம். இதன் மூலம் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, களையெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் விரிவான ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது 1,456 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றுள்ள 59 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுள் பெரும்பாலானவை காய்ச்சல், சளி, செரிமான மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் தரமற்ற மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

