புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-வது அறிக்கை மீது இந்தித் திணிப்புக்கு எதிராக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.
இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். சில மாநிலங்களில் பாஜக அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.
இதை சமாளிக்க அறிக்கையை மீட்டுக்கொண்டு அதில் திருத்தம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவராக அமைச்சர் அமித்ஷா உள்ளார்.
ஆட்சி மொழிக்குழுவின் 11வது அறிக்கையின் சாராம்சம் ஒரு இணையத்தளத்தில் அக்டோபர் 8ஆம் தேதி வெளியானது.
இதையடுத்து தொழில் கல்வி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளின் உயர்கல்வியிலும் மத்திய அரசு இந்தி மொழி திணிப்பு செய்வதாக இந்திப் புழக்கம் இல்லாத மாநில மக்களிடம் இருந்து புகார் கிளம்பியது.
இந்தி பேசாத மாநிலங்களின் தலைவர்களும் மக்களும் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
தமிழ் நாடு, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் என ஏராளமான மாநிலங்களில் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்தித் திணிப்பு முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தித் திணிப்புக்கு எதிராக வலுக்கும் இந்தப் போக்கு, வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தங்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும் என பாரதிய ஜனதா அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில் குஜராத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இதில், மாநில மொழிகளிலும் சட்டக்கல்வி பயிற்றுவிக்க அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அந்த அறிக்கையில் சில முக்கியத் திருத்தங்களை செய்து மீண்டும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்ப அமைச்சர் அமித்ஷா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

