தீபாவளியின்போது பட்டாசு வெடித்தால் சிறை

தீபாவளியின்போது பட்டாசு வெடித்தால் சிறை

1 mins read
4fdb6b6e-c38b-4bb4-a163-e96bff45d668
உலகின் ஆக மோசமான காற்றுத் தூய்மைக்கேடான தலைநகரம் புதுடில்லி (படம்: ராய்ட்டர்ஸ்) -

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசுகளை வெடிப்பவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

குளிர்காலத்தின்போது ஏற்படும் மிக மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டை கட்டுப்படுத்த இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகின் ஆக மோசமான காற்றுத் தூய்மைக்கேடான தலைநகரம் புதுடில்லி. தூசி, புகை, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை போன்றவை குளிர் காற்றில் அடைபட்டுக்கொள்கின்றன. இதனால் அங்கு வாழும் 20 மில்லியனுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலோருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

தலைமுறை தலைமுறையாக தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பது பாரம்பாரியமாகக் கருதப்படுகிறது. ஆனால், பட்டாசுகளின் விற்பனையையும் பயன்பாட்டையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நகர அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

பட்டாசு வெடிப்போருக்கு 200 ரூபாய் அபராதமும் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று புதுடில்லியின் சுற்றுச்சூழல் அமைச்சரான கோபால் ராய் தெரிவித்தார்.

பட்டாசுகள் வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், 5,000 ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

பட்டாசுகள் மீதான தடை செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம்வரை நீடிக்கும்.

பட்டாசுகளுக்குத் தடைவிதிப்பதால் தங்களுடைய தீபாவளிக் கொண்டாட்டங்கள் பாதிக்கப்படுவதாக சில இந்துக்கள் கூறுகின்றனர்.