காதல் கடிதம் என்று தவறாக எண்ணியதால் நடந்த கொடூரக் கொலை

காதல் கடிதம் என்று தவறாக எண்ணியதால் நடந்த கொடூரக் கொலை

1 mins read
e35ddf42-a314-4142-876b-83f4b61164d2
சிறுவனின் உடல்பாகங்கள் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன (படம்: இந்திய ஊடகம்) -

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டு பின்னர் அவனது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

சிறுவனின் உடல்பாகங்கள் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. வகுப்பறைக்குள் அச்சிறுவன் வீசிய தேர்வு ஏமாற்றுச் சீட்டை காதல் கடிதம் என்று தவறாக எண்ணியதால் சிறுவன் கொல்லப்பட்டான் என்று நம்பப்படுகிறது.

சென்ற வாரம் தனது தங்கையைப் பள்ளிக்கு அழைத்துச்சென்றான் மாண்ட சிறுவன். அன்று தங்கைக்கு தேர்வு இருந்ததால் அவளுக்கு உதவுவதற்காக ஏமாற்றுச் சீட்டை வகுப்பறைக்குள் வீசியுள்ளான் சிறுவன். அந்தச் சீட்டு வெறொரு மாணவிமீது விழுந்தது. அதைக் காதல் கடிதம் என்று எண்ணிய சிறுமி அது பற்றி தனது சகோதரர்களிடம் கூறியுள்ளார்.

அவர்கள் சிறுவனைத் தேடிச்சென்று அவனை அடித்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் வீடு திரும்பவில்லை. ஒருசில நாள்கள் கழித்து துண்டிக்கப்பட்ட கை ஒன்று ரயில் தண்டவாளத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை அழைக்கப்பட்டு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிறுவனுடைய கை, கால்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் தொடர்பில் காதல் கடிதம் என்று தவறாக எண்ணிய சிறுமியின் சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வயது குறைவானவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.