புதுடெல்லி: இந்தியாவில் வறுமைக் குறியீடு 55.1 விழுக்காட்டில் இருந்து 16.4 விழுக்காடாகக் குறைந்து உள்ளதாக நடப்பாண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறு மைக் குறியீடு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட (யுஎன்டிபி) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில், இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் பல பரிமாண வறுமை நிலையில் இருந்து 41.5 கோடி பேர் மீண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்தியர்களின் வறுமைக் குறியீடு 55.1 விழுக்காட்டில் இருந்து 16.4 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக இவ்வாண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக்குறியீடு தெரிவித்துள்ளது.
வறுமையைப் போக்குவதில் கோவா அதிக வேகம் காட்டி வருவ தாகவும் அதனைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2015-16 கணக்கீட்டின்படி அதிக ஏழைகளைக் கொண்ட பிரிவில் 10 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன.
2019-2021ல் இப்பிரிவில் இருந்து வெளியேறிய ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.
எஞ்சியுள்ள பீகார், ஜார்க்கண்ட், மேகாலயா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், ஒடிசா, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
வறுமையின் பிடியிலிருந்து கோடிக்கணக்கானோர் மீண்டுள்ளது மிகப்பெரிய வரலாற்று மாற்றமாகும்.
இருப்பினும், 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் உள்ளனர். உலகளவில் பார்க்கும்போது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. இதனால், ஏராளமான சவால்களும் தொடர்ந்து வருவ தாகவும் அமைப்பு சுட்டிக் காட்டி உள்ளது.

