பட்டாசு வெடித்தால் ரூ.200 அபராதம்; ஆறு மாதச் சிறை
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வெடித்தால் ரூ.200 அபராதத்துடன் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என டெல்லி அரசின் சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் எச்சரித்துள்ளார்.
"தீபாவளிப் பண்டிகை என்பது விளக்குகளின் திருவிழா; பட்டாசு வெடிப்பது அல்ல," எனவும் ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று இடங்களில் குண்டு வெடிக்குமென எச்சரிக்கை
மும்பை: அதிக அளவில் மக்கள் ஒன்றுகூடும் மும்பை நகரின் மூன்று முக்கியப் பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என தொலைபேசியில் சந்தேகப் பேர்வழி ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து, அவர் குறிப்பிட்டிருந்த இன்ஃபினிட்டி மால், ஜுகு மால், விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, சோதனை நடந்தது. புரளியைப் பரப்பி, நேரத்தை வீணடித்தவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சென்னை: மத்தியப் பிரதேச மாநிலம், நீமச் மாவட்டத்தில் காரில் போதைப்பொருள் கடத்திய 25 வயது ஷாரூக் கான் என்ற இளையர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 15 பொட்டங்களில் 14.5 கிலோ போதைப்பொருளை நீமச் மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் அனைத்துலக மதிப்பு ரூ.15 கோடி என்று கூறப்படுகிறது.
ரூ.1,353 கோடிக்கு துபாயில் புது
மாளிகை வாங்கிய முகேஷ் அம்பானி
மும்பை: 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, குவைத்தைச் சேர்ந்த 'அல்ஷாயா' குழுமத்தின் தலைவரான முகமது அல்ஷாயாவிடம் இருந்து ஏறத்தாழ ரூ.1,353 கோடிக்கு பாம் ஜுமேரா தீவில் மாளி கையை வாங்கியுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
புகாரளித்த சிறுவனுக்கு அன்பளிப்பு
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன் தாய் எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பதாகவும் தன் மிட்டாய்களைத் திருடிவிடுவதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தான். அவனது துணிச்சலைப் பாராட்டிய அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, சிறுவனுக்கு குழந்தைகளுக்கான மிதிவண்டியும் சாக்லேட்டுகளும் பரிசளித்துள்ளார்.

