பெங்களூரு: இந்தியாவின் வேலையின்மை விகிதம் செப்டம்பர் மாதத்தில் 6.4% ஆக இருந்தது. அது அக்டோபர் மாதம் 7.86% ஆகக் கூடிவிட்டது.
விழாக்காலப் பரபரப்புகளும் விற்பனைகளும் உள்நாட்டுத் தேவையும் கூடியிருக்கின்றன. என்றாலும்கூட அவற்றால் வேலை வாய்ப்புகள் அதிகரித்ததாக தெரியவில்லை என்று இந்தியப் பொருளியல் கண்காணிப்பு நிலையம் என்ற அமைப்பைச் சேர்ந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமப் புறங்களில் வேலையின்மை விகிதம் 8.01% ஆக அதிகரித்தது. அதேவேளையில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 7.53% ஆக இருந்து வருகிறது.
கடந்த செப்டம்பரில் கிராமப் புறங்களில் வேலையின்மை விகிதம் 5.84% ஆக இருந்தது. கடுமையான மழையும் நிதி நிலவரங்கள் கடுமையாக்கப்பட்டதும் இதற்கான காரணங்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பரந்த அளவிலான பொருளியல் அம்சங்களும் வேலையின்மை விகிதத்தை உயர்த்திவிட்டதாக இதர சிலர் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேலை வாய்ப்புச் சந்தையை, தீபாவளிப் பரிசாக இன்று காணொளி வழி தொடங்கி வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
தொடக்கவிழாவில் 75,000 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குவார்.
அவர்கள் மத்திய அரசின் 38 அமைச்சுகள் அல்லது துறை களில் சேர்வார்கள்.