தங்கம் கடத்த இப்படியும் சிந்திப்பார்களா? ஆனாலும் சிக்கினார்

தங்கம் கடத்த இப்படியும் சிந்திப்பார்களா? ஆனாலும் சிக்கினார்

1 mins read
a850734a-5222-4072-9eda-e21273b4cbbd
தங்கத் திரவத்தில் முக்கியெடுக்கப்பட்ட ஐந்து துண்டுகள் கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டன. படம்: மனோரமா ஆன்லைன் -

தங்கத்தின் விலையும் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கடத்துவோரும் புதிது புதிதாகச் சிந்திக்கின்றனர்.

அப்படி ஒரு புதுமையான வழியில் தங்கம் கடத்த முயன்ற ஒருவர் இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார்.

திருச்சூரைச் சேர்ந்த ஃபகத், 26, என்பவர் இம்மாதம் 10ஆம் தேதி துபாயிலிருந்து விமானம் மூலமாக கொச்சியைச் சென்றடைந்தார்.

பயண உடைமைச் சோதனையின்போது அவரது பயணப்பையில் ஒரு நெகிழிப்பைக்குள் ஈரத்துண்டு இருந்ததைச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டனர்.

அதுபற்றிக் கேட்டதற்கு, துபாய் விமான நிலையத்திற்கு வருமுன் தான் குளித்ததாகவும் துண்டை உலர்த்த நேரமில்லாததால் ஈரத்தோடு அதனைப் பையில் போட்டு எடுத்துவந்ததாகவும் ஃபகத் கூறினார்.

ஆனால், மேலும் சோதனையிட்டபோது அதுபோன்று இன்னும் நான்கு துண்டுகள் நெகிழிப்பைக்குள் வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்பைகளைப் பிரித்துப் பார்த்தபோது, துண்டுகள் தங்க நிறத்தில் மின்னின.

"தங்கத்தை உருக்கித் திரவமாக்கி, அதில் துண்டுகளை முக்கி எடுத்துள்ளார். இதன்மூலம் தங்கத்துகள்கள் துண்டில் ஒட்டிக்கொண்டன. பின்னர் துண்டிலிருந்து தங்கம் வேதிச் செயல்முறைமூலம் பிரித்து எடுக்கப்படும்," என்று அதிகாரி ஒருவர் விளக்கினார்.

இவ்வழியில் தங்கக் கடத்தல் முயற்சி இடம்பெற்றது இதுவே முதன்முறை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஃபகத் எவ்வளவு தங்கத்தைக் கடத்த முயன்றார் என்பதைக் கண்டறிய இன்னும் சில நாள்கள் ஆகலாம் என்றும் சுங்கத்துறை தெரிவித்தது.