இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கில் வேலைவாய்ப்பு கண்காட்சி எனும் ஆள்சேர்ப்பு முயற்சியை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
இளையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கு கொண்டுள்ள இந்த முயற்சியின் முதல்கட்டமாக 75,000 பேருக்கு இன்று வேலை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
மெய்நிகர் வழியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திரு மோடி, கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக உலகின் ஐந்தாவது பெரிய பொருளியலாக இந்தியா உயர்ந்திருப்பதாகக் கூறினார்.
"கடந்த 100 ஆண்டுகள் இல்லாத மிகப்பெரிய உலகளாவிய பொருளியல் நெருக்குதலின் விளைவாக பெரிய பொருளியலைக் கொண்டுள்ள பல நாடுகள் பணவீக்கம், வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் சிரமப்படுகின்றன. இத்தகைய சவால் வெறும் 100 நாள்களில் மறைந்துவிட வாய்ப்பில்லை," என்றார் திரு மோடி.


