குவாலியர்: மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் குறைந்தது 15 பேர் மாண்டனர்; ஏறத்தாழ 40 பேர் காயம் அடைந்தனர்.
பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்களில் 20 பேர் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து கோரக்பூர் நோக்கி அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
அதில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என ரேவா மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.
விபத்தில் மாண்டோரின் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
"மத்தியப் பிரதேச முதல்வரிடம் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை பற்றி பேசினேன். விபத்தில் உயிரிழந்த உத்தரப் பிரதேச மாநிலத்தாரின் உடல்களை அவர்
களது சொந்த ஊருக்குத் திரும்ப கொண்டு வருவது பற்றியும் பேசினேன்.
"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 வழங்கப்படும்," என்று யோகி ஆதித்யநாத் டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விபத்தில் இறந்தவர்
களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

