கர்நாடகத்தில் 21 ஆட்சியர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு
பெங்களூரு: கர்நாடகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கர்நாடக உணவு விநியோக கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த திவ்யா பிரபு, சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர கன்னடா மாவட்ட ஆட்சியரான முல்லை முகிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
ஜம்மு மேயர் தேர்தலில்
பாஜக வெற்றி
ஜம்மு: ஜம்மு மாநகராட்சி மேயர் பதவியிலிருந்து பாஜகவின் சந்தர்மோகன் குப்தா, துணை மேயர் பதவியிலிருந்து அக்கட்சியின் பூர்ணிமா சர்மா ஆகியோர் கடந்த மாதம் பதவி விலகினர்.
சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
இந்நிலையில் புதிய மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது. ஆனால் ரகசிய வாக்களிப்பு முறைக்குப் பதிலாக திறந்தநிலை வாக்களிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
இந்நிலையில், மேயராக பாஜகவின் ரஜிந்தர் சர்மாவும் துணை மேயராக பல்தேவ் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜம்மு மாநகராட்சி ஆணையர் ராகுல் யாதவ் அறிவித்தார். 75 கவுன்சிலர்களைக் கொண்ட ஜம்மு மாநகராட்சியில் 44 கவுன்சிலர்களுடன் பாஜக பெரும்பான்மை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தெருநாய்கள் கடித்ததில்
5 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு
குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் தெருநாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் நேரத்தில் தெருவில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த அந்தச் சிறுமியை கிட்டத்தட்ட ஆறு தெருநாய்கள் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த அந்தச் சிறுமி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுமியின் உயிர் பிரிந்தது. தெருநாய்கள் கடித்ததில் சிறுமியின் கழுத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
அதிக அளவு ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சிறுமி மாண்டதாக அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனை கூறியது.

