ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்
தவான் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இங்கிலாந்தின் 36 செயற்கைக்கோள்களுடன்
எல்விஎம்3-எம் 2 விண்கலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக பாய்ச்சப்பட்டது.
அதை அங்கிருந்த மைதானத்தில் திரண்ட 5,000க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். வணிக பயன்பாட்டுக்காக இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் 'ஒன்வெப்' நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாய்ச்சப்பட்ட விண்கலம் 43.5 மீட்டர் உயரமும் 640 டன் எடையும் கொண்டது. இந்தியாவின் மிகப் பெரிய பிரம்மாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தைச் சேர்ந்த எல்விஎம்3 விண்கலம் கருதப்படுகிறது. திட, திரவ மற்றும் கிரையோ
ஜெனிக் இயந்திரங்களால் இயக்கப்படும் மூன்று நிலைகளைக் கொண்ட விண்கலம் முதல்முறையாக கிட்டத்தட்ட 6 டன் எடையுள்ள 36 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது.
உலகின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன்வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைக்காக இந்தச் செயற்கைக்கோள்களை அனுப்பி இருக்கிறது.
ஒன்வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும் முதலீட்டாளராகவும் இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்திராயன்-3
இதற்கிடையே, சந்திராயன்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
கடைசிக்கட்ட ஒருங்கிணைப்புப் பணிகள் ஏறக்குறைய நிறை
வடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், சில பரிசோதனைகள் எஞ்சியிருப்பதாக திரு சோம்நாத் கூறினார்.
"எஞ்சியுள்ள பரிசோதனை
களைக் கூடிய விரைவில் செய்து முடிக்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்த முடிவு எடுத்துள்ளோம்," என அவர் கூறியுள்ளார்.
விண்ணில் அனுப்பப்பட்டுள்ள 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாகப் பிரிந்து பாதுகாப்பான முறையில் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

