நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பல ரகசிய கேமராக்களை ஒளித்துவைத்து அறையில் தங்கிய தம்பதியரின் அந்தரங்க காட்சிகளை எடுத்து பிறகு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய இரண்டு ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விஷ்ணு சிங், அப்துல் வஹாப் ஆகிய இருவரும் முதலில் அந்த ஹோட்டல் அறையில் தங்கினர். அப்போது அங்கு பல ரகசிய கேமராக்களைப் பொருத்தினர். அவர்கள் அங்கிருந்து சென்றதும் அதே அறையில் கணவன்-மனைவி தங்கினர்.
அவர்கள் தனிமையில் இருக்கும் காட்சிகள் ரகசிய கேமராக்களில் பதிவாகின. தம்பதியர் ஹோட்டல் அறையை விட்டுச் சென்றதும் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, விஷ்ணு சிங்கும் அப்துல் வஹாப்பும் அதே அறையை வாடகைக்கு எடுத்தனர். அங்கு தாங்கள் ரகசியமாக பொருத்திய கேமராக்களை எடுத்துச்சென்றனர். கேமராவில் பதிவான அந்த தம்பதியின் தனிமை வீடியோ காட்சிகளைக் கைப்பற்றி அந்த தம்பதியை கைத்தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டினர். பணம் தரவில்லையென்றால் தனிமையில் இருக்கும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அவர்கள் மிரட்டினர்.
இதுகுறித்து அந்தத் தம்பதியர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். விஷ்ணு சிங்கையும் அப்துல் வஹாப்பையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவத்துடன் ஹோட்டல் ஊழியர்களுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

