திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன.
இந்த சட்டக் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சட்டக் கல்வி பயில்கின்றனர்.
கடந்த சில நாள்களாகச் சட்டக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
தேர்வுகளை முடித்துக்கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத சம்பவம் நடந்தது.
எஸ்.ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்றபோது ஃபாஸ்ட் டிராக் தானியங்கி சாலைக் கட்டண இயந்திரம் இயங்கவில்லை.
எனவே, ரொக்கம் செலுத்திவிட்டு செல்லும்படி ஆந்திர நெடுஞ்சாலை சுங்கசாவடி ஊழியர்கள் தமிழக மாணவர்களிடம் தெரிவித்தனர்.
ஆனால் ஃபாஸ்ட் டிராக்கில் தானியங்கி பணம் உள்ளது என்றும் ஸ்கேன் செய்து பணத்தை எடுத்துக்கொள்ளுமாறும் மாணவர்கள் கூறினர்.
ஃபாஸ்ட் டிராக் காலக்கெடு முடிந்த நிலையில் பணத்தைக்
கட்டிவிட்டுச் செல்லுங்கள் என சுங்கச்சாவடி ஊழியர் கூறி, தலைக்கவசத்தால் தாக்கி
வாகனத்தை பின்னால் எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனால் சினங்கொண்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் முதலில் எங்களுக்குத் தீர்வு கண்டுவிட்டு பின்னர் மற்றவர்களிடமிருந்து
கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறினர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கினர்.
இதையடுத்து, தமிழக மாணவர்கள் சுங்கச்சாவடிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனால் நிலைமை மோசமடைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாகத் திரண்டு தமிழகத்திலிருந்து வந்து எங்களிடம் பிரச்சினை செய்கிறீர்களா எனக் கூறி சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்களது கார் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமாலா பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழக மாணவர்களைப் பலர் ஒன்றுசேர்ந்து தாக்கியதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

