புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு பிலிப்பீன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனீசியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதையடுத்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணைகளை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் 41,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்த அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் என அனைத்து வகை போர்த் தளங்களில் இருந்தும் ஏவக்கூடிய வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணை என்ற பெருமையைப் பெற்றுள்ளது பிரம்மோஸ்.
சுமார் 28 அடிநீளம், 2 அடி விட்டம், 3,000 கிலோ எடைகொண்ட இந்த ஏவுகணை ஒலியைவிட மும்மடங்கு வேகத்தில் சென்று இலக்குகளைத் தாக்க வல்லது. ஆகக் கடைசியாக மேற்கொண்ட சோதனையின்போது, இந்த ஏவுகணை 450 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை தாக்கியது.
இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரம்மோஸ் ஹைப்பர்சானிக் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், செயற்கைக்கோள்கள் மூலம் பிரம்மோஸ் ஏவுகணையை விண்ணில் ஏவும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து, இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகள் மத்தியில் போட்டி நிலவுகிறது.
அவற்றுள் பிலிப்பீன்ஸ் நாடு சுமார் 3,103 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன்றை இந்திய அரசுடன் செய்து கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் அந்நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் அனுப்பப்பட உள்ளன.
வியட்நாம், மலேசியா, இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளுடனும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்கவும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்காப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.