புதுடெல்லி: இங்கிலாந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவரது மாமனாரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
42 வயதான ரிஷி சுனக் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த இருநூறு ஆண்டுகளில் தேர்வான இங்கிலாந்தின் ஆக இளம் வயது பிரதமர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்ற அவர், பின்னர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் 'இன்ஃபோசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்ஷதாவைக் காதலித்து மணந்தார் ரிஷி சுனக்.
கடந்த 2009ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
"ரிஷிக்கு வாழ்த்துகள். நாங்கள் அவர் குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னாலான அனைத்து நன்மைகளையும் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நாராயண மூர்த்தி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமருடன் இணைந்து செயல்பட தாம் மிகுந்த ஆவல் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

