பெங்களூரு: பொது நிகழ்ச்சியில் தம்மிடம் உதவி கோரி வந்த பெண்ணை அறைந்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார் கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா.
நேற்று முன்தினம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.
அப்போது பட்டாக்களைப் பெறுவதில் பயனாளிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்தச் சூழலில் ஒரு பெண்மணி, அமைச்சரை அணுகி தமக்கும் பட்டா வழங்கி உதவும்படி கோரிக்கை விடுத்தார்.
கூட்டம் முண்டியடித்ததால் எரிச்சலடைந்த அமைச்சர் சோமண்ணா, கோபத்தில் அந்தப் பெண்ணை அறைந்தார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள், அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தின. எனினும் தொடக்கத்தில் அமைச்சர் வாய் திறக்கவில்லை.
அவரது அமைச்சு அலுவலகம் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில், அமைச்சரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தோன்றி, அமைச்சர் தமக்கு உதவுவதாகக் கூறினார் என்றும் தம்மை கன்னத்தில் அறையவில்லை என்றும் குறிப்பிடுகிறார். அந்தக் காணொளியில் அவர் தம் குழந்தைகளுடன் காணப்படுகிறார்.
இதற்கிடையே, அந்தப் பெண்ணிடம் தாம் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக கூறி, அந்தப் பெண்ணை ஓரமாக ஒதுங்கி நிற்க வைக்க முயற்சி செய்தேன். கடந்த நாற்பது ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்,"என்று அமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் அவரை விடுவதாக இல்லை.
இதற்கிடையே, சமூக ஊடகங்களில் வாக்குவாதங்கள் முற்றியுள்ள நிலையில், அமைச்சர் சோமண்ணாவிடம் கர்நாடக முதல்வர் இந்தச் சர்ச்சை தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக கன்னட ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

