ரத்தச் சகதியில் சிறுமி; உதவாமல் காணொளி பதிவு செய்த மக்கள்

ரத்தச் சகதியில் சிறுமி; உதவாமல் காணொளி பதிவு செய்த மக்கள்

1 mins read
4e12f4dd-b45d-4ec0-a5b6-8874225a40a6
-

லக்னோ: தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட சாலையோர புதரில் விழுந்து கிடந்த சிறுமி தமக்கு உதவுமாறு கதறியபோதும், அவளைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர்கூட உதவி செய்யவில்லை.

இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் நிகழ்ந்துள்ளது.

ரத்தச் சகதியுடன் காணப்பட்ட அந்த 13 வயதுச் சிறுமி தமக்கு உதவுமாறு கெஞ்சுகிறாள். ஆனால் சுற்றி நின்ற பலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். ஒருவர்கூட துணிந்து களமிறங்கி அச்சிறுமிக்கு குறைந்தபட்ச முதலுதவி கூட அளிக்கவில்லை.

பலர் அச்சிறுமியின் அவல நிலையை தங்கள் கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவதிலேயே முனைப்பாக இருந்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் யாரும் முன்வரவில்லை.

பின்னர் ஒருவழியாக காவல்துறையினர் அங்கு வந்து அச்சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளித் தொகுப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பலர் விவாதம் நடத்தி வருகின்றனர். சிறுமியுடன் இளையர் ஒருவர் நடந்து வருவது அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.