செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
816c00f3-89b6-4a20-ab72-88fe171fb9b6
-

துடைப்பத்தால் கொள்ளையனை விரட்டியடித்த நகைக்கடை பணிப்பெண்

மும்பை: நகைக்கடையில் கொள்ளையடிக்க துப்பாக்கியுடன் வந்த ஆடவரை துடைப்பத்தால் விரட்டி அடித்த பெண்ணின் துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. நேற்று முன்தினம் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் காலை ஒன்பது மணியளவில் திடீரென புகுந்த அந்தக் கொள்ளையன், கடை உரிமையாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளான். அப்போது அங்கு பணியில் இருந்த முப்பது வயது நிறைந்த பணிப்பெண் துணிச்சலுடன் அந்தக் கொள்ளையனை கையிலிருந்த துடைப்பத்தால் தாக்கினார். இதை எதிர்பாராத அந்தக் கொள்ளையன் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் தவிக்க, கடை உரிமையாளரும் அவனைப் பிடிக்க முயன்றார். இதனால் வேறு வழியின்றி அவன் ஓட்டம் பிடித்தான்.

கிரிக்கெட் பார்த்தபோது மாரடைப்பு

கௌஹாத்தி: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருப்பங்களைக் கண்ட அதிர்ச்சியில் 34 வயது ஆடவர் பலியானார். அசாம் மாநிலம், சிவசாகர் நகரைச் சேர்ந்த பிடு கோகாய் என்ற அந்த ஆடவர், தமது நண்பர்கள் சிலருடன் உள்ளூர் திரையரங்கில் சிறப்பு ஏற்பாட்டின் கீழ் பெரிய திரையில் ஒளிபரப்பான ஆட்டத்தை நேரலையில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் கடைசி மூன்று ஓவர்களில் இந்தியா வெற்றி பெற கடுமையாகப் போராடியது. அப்போது இந்திய வீரர் விராத் கோஹ்லி ஒரு சிக்சர் விளாசியபோது நண்பர்களுடன் சேர்ந்து பிடு கோகாயும் உற்சாகத்தில் உரக்கக் குரல் கொடுத்தார். அடுத்த நொடியே அவர் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் காலமானதாகத் தெரிகிறது.

இளையரை கொன்ற 15 வயதுச் சிறுவன்

மும்பை: காலி புட்டியில் வைத்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று கண்டித்த இளையரை 15 வயதுச் சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றான். மும்பையில் உள்ள சிவாஜி நகரைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் இவ்வாறு பட்டாசு வெடித்தபோது அவ்வழியே சென்ற 21 வயதான சுனில் நாயுடு என்ற இளையர், அவர்களைக் கண்டித்தார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது சிறுவர்கள் அவரைத் தாக்கினர். மேலும் அவர்களில் ஒருவன், கத்தியால் சுனிலை குத்தியுள்ளான்.