கவுகாத்தி: சிட்ராங் சூறாவளி புயலானது பங்ளாதேஷ் நாட்டின் சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் திங்கள்கிழமை முழுமையாக கரையை கடந்தது. சூறாவளியால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
இதன் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவின் அசாம் உள்பட நான்கு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. பங்ளாதேஷ் எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே சூறாவளியானது கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
திரிபுராவில் புயலால், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதேபோன்று, முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
கடல் பகுதிகளுக்கு மக்கள் தேவையின்றிச் செல்ல வேண்டாம் என்று அவர் வேண்டுகோளும் விடுத்து உள்ளார்.
இதன்படி, அசாம் உள்ளிட்ட குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்களை சிட்ராங் சூறாவளி கடந்து சென்றது. அசாமில் சிட்ராங் சூறாவளி பாதிப்புக்கு 83 கிராமங்களைச் சேர்ந்த 1,146 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மைக் கழகம் தெரிவித்து உள்ளது. இதனால், அசாமில் நகாவன் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
கலியாபோர், பாமுனி, சக்முதியா தேயிலை தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்து உள்ளன. மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. சூறாவளியால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து 325.501 ஹெக்டர் விளை நிலங்கள் சேதமடைந்து உள்ளன. எனினும் உயிரிழப்பு, காயங்கள் உள்ளிட்டவை ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
சிட்ராங் சூறாவளியை முன்னிட்டு மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பக்காளி பீச்சில் கடல் அலைகள் அதிக உயரத்தில் எழுந்தன.
இதனால், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்ப் பொதுமக்கள் ஆகியோர் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என நகர நிர்வாகம் அறிவுறுத்தியது.

