ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், தீபாவளி நாளில் பேருந்துக்குள் விளக்குகளை ஏற்றிவிட்டு, அதற்குள் படுத்துறங்கிய ஓட்டுநரும் உதவியாளரும் தீயில் கருகி பலியாகினர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் இருந்த இரண்டு பேர் உடல் கருகி பலியானது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், அவர்கள் பேருந்துக்குள் விளக்குகளையும் மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விளக்குகளும் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டிருந்ததால் பேருந்துக்குள் தீப்பற்றியதாகவும், இதில் பேருந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்த இளையர் ஒருவரும் முதியவர் ஒருவரும் உடல் கருகி பலியாகினர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு நடந்தது.
பேருந்துக்குள் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு ஓட்டுநரும் உதவியாளரும் வழிபாடு செய்தனர். அப்போது காற்றடித்து விளக்குகள் அணைந்துவிடாமல் இருக்க பேருந்தின் கதவுகளையும், சன்னல்களையும் மூடினர். விளக்கை அணைக்க மறந்தவாறு இருவரும் பேசிக்கொண்டே உறங்கிவிட்டனர்.
இருவரும் மதுபோதையில் இருந்ததால், பேருந்துக்குள் தீப்பற்றியதும் கூட தெரியாமல் மயக்கநிலையில் இருந்ததால் அவர்களால் தப்பித்து ஓட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

