செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f512676a-0150-4cd9-8482-d94d784b52c4
-

மோடியின் காரில் ஏற முயன்ற முதல்வர் தடுத்து நிறுத்தப்பட்டார்

புதுடெல்லி: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது குஜராத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்துக்குச் சென்று பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடியின் வாகனத்தில் ஏற முயன்ற அம்மாநில முதல் அமைச்சர் பூபேந்திர பட்டேலை, படை வீரர் ஒருவர் தடுத்து நிறுத்தும் காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது பரவுகிறது. அந்தக் காணொளியில், பிரதமரின் வாகனத்தில் ஏற முயற்சி செய்யும் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலை பிரதமரின் பாதுகாவல் அதிகாரிகள், தடுத்து நிறுத்துவதையும் காணலாம். குஜராத் முதல்வர் இவ்வாறு பாதுகாப்புப் படை வீரரால் அவமதிக்கப்பட்டதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் கொள்கலன் வெடித்து ஒருவர் பலி; ஏராளமானோர் காயம்

கார்கோன்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் கார்கோன் மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் எரிபொருள்

ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

அஞ்சன்கோன் கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த வாகனம், சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை அறிந்த அவ்வட்டார மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது, திடீரென அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. இதில், அங்கே இருந்த ஒரு பெண் பலியானார். 23 பேர் படுகாயமடைந்தனர்.

கடப்பிதழ் இன்றி அபுதாபியில் தவிக்கும் பஞ்சாப் தொழிலாளிகள்

புதுடெல்லி: அபுதாபியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாப் மாநிலத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். அவர்களுடைய கடப்பிதழை அந்த நிறுவனம் திருப்பித்தராமல் முடக்கிவைத்துள்ளது. அதனால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க உதவுமாறு பஞ்சாப் மாநிலத்தின் சமூக ஆர்வலர் தில்பாக் சிங், வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.