தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடகமாடுவதாக பாஜக பதிலடி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்திலும் பிற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களைக் கவர்ந்திழுக்கும் வேலையில் பாஜக கட்சித் தலைமை ஈடுபடுவதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
அக்கட்சி எம்எல்ஏக்கள் மூன்று பேரிடம் கட்சி தாவுவது தொடர்பாக பேரம் பேசப்பட்டதாகவும் இதற்காக நூறு கோடி ரூபாய் அளிப்பதாக மூவருக்கும் ஆசை காட்டப்பட்டதாகவும் டிஆர்எஸ் சாடியது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை மூன்று பேரைக் கைது செய்துள்ளது.
கட்சி தாவும்படி மூன்று பேர் தங்களிடம் பேரம் பேசியதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏக்கள் மூன்று பேர் புகார் எழுப்பி உள்ளனர். இது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததும் ஹைதராபாத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அப்போது, எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய மூவர் அங்கு இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
"மூவரில் ஒருவரான சதீஷ் ஷர்மா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கோவில் அர்ச்சகர் ஆவார். அவரது நண்பரான சிம்ஹயாஜி என்ற சாமியாரும் சிக்கி உள்ளார். இவர்கள் இருவரையும் நந்த குமார் என்பவர் ஹைதராபாத்துக்கு அழைத்து வந்து டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களுடன் பேரம் பேச வைத்துள்ளார்.
"இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புலன்விசாரணை செய்து, என்னவிதமான ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன என்ற விவரங்களை வெளிப்படுத்துவோம்," என்று ஹைதராபாத் காவல்துறை தெரிவித்ததாக பிபிசி தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி முனுகோடே சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பாஜகவுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், கட்சித்தாவலுக்காக பாஜக தரப்பில் இருந்து நூறு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இத்தகைய செயல்பாடுகள் மூலம் தெலுங்கானா அரசைக் கவிழ்த்துவிட இயலாது என அக்கட்சியின் கொறடா தசியம் வினய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிற கட்சி எம்எல்ஏக்களை இழுக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு எழவில்லை என்றும் இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என ஆளும் தரப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அம்மாநில பாஜக மூத்த தலைவர் கிஷன் ரெட்டி பதிலடி தந்துள்ளார்.
தோல்வியைத் தவிர்க்க தெலுங்கானா முதல்வர் நாடகம் ஆடுவதாகவும் அவர் சாடி உள்ளார்.

