செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2b804f76-fd7c-4e0c-80cc-6a79c4b3dd0b
-

குஜராத்தில் 900 அதிகாரிகள் இடமாற்றம்

அகமதாபாத்: எதிர்வரும் டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு

900 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் அட்டவணையைத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதை அடுத்து, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷி, மோடி அடுத்த மாதம் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி அடுத்த மாதம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனீசியாவின் பாலி தீவில் நவம்பர் 15ஆம் தேதி ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. அதில் இவ்விரு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அப்போது இருவரும் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரூ.1.72 கோடிக்கு ஏலம் போன 70 சதுர அடி பரப்பளவு கொண்ட கடை

போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற கஜ்ரானா பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள 70 சதுர அடி பரப்பளவு உள்ள ஆகச்சிறிய கடை ஒன்று 1.72 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. பூசைப் பொருள்களை விற்பனை செய்யும் அந்தக் கடைக்குக் கோவில் நிர்வாகம் முப்பது ஆண்டுகளுக்கான அடிப்படை ஏலத்தொகையாக ரூ.30 லட்சம் மட்டுமே நிர்ணயித்திருந்தது. எனினும், உள்ளூர் வியாபாரி ஒருவர் பெருந்தொகைக்கு ஏலம் எடுத்துள்ளார்.

நைஜீரிய ஆடவருக்குக் குரங்கம்மை

புதுடெல்லி: நைஜீரிய குடிமகன் ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

97% கைப்பேசிகள் உள்நாட்டில் தயாரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில், சுமார் 97 விழுக்காடு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக மத்திய மின்னணுத் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில், 92% கைப்பேசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது நிலைமை மாறியுள்ளது என்றும் இந்தியா 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுச் சாதனங்களை ஏற்றுமதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.