புதுடெல்லி: இந்தியா முழுவதும் வறுமையாலும் பல்வேறு பருவநிலை மாற்றங்களாலும் சுமார் 22.20 கோடி சிறார்கள் பாதிப்புக்கு ஆளாவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த எண்ணிக்கை உலக அளவில் சுமார் 77.40 கோடியாக உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
'சேவ் தி சில்ட்ரன்' என்ற சிறார்கள் உரிமை அமைப்பும் பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகமும் இந்த ஆய்வை மேற்கொண்டன.
சிறார்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பாதிப்புகள் குறித்து இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டில்தான் பெருமளவு சிறார்கள் வறுமை, பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலைச் சந்திப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 72 விழுக்காடு சிறார்கள் இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
64 விழுக்காடு சிறார்கள் பாதிப்புக்கு ஆளாவதை அடுத்து இந்தப் பட்டியலில் மியன்மார் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் 57 விழுக்காடு சிறார்கள் பாதிக்கப்படுவதால் மூன்றாவது இடத்தில் உள்ளது அந்நாடு.
இந்நிலையில், இந்தியாவில் மொத்தமுள்ள சிறார்களில் 51 விழுக்காட்டினர் வறுமை, பருவ நிலையால் பாதிப்புக்கு ஆளாவதாக மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, 22 கோடியே 20 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், 35.19 கோடி சிறார்கள் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பருவநிலை நிகழ்வால் பாதிக்கப்படுவதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அனைத்து மாநிலங்களிலும் சிறார்கள் பலர் இரட்டை அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்தாலும், கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, புயல் காரணமாகத்தான் ஏராளமான சிறார்கள் வறுமை நிலைக்கு ஆட்படுவதாக இந்தப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அதிக வருமானம் உள்ள நாடுகளில் வசிக்கும் சிறார்கள்கூட வறுமை, பருவநிலை பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவில்லை.
அந்நாடுகளைச் சேர்ந்த சுமார் 12.10 கோடி சிறார்கள் இரட்டை அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக அண்மையில் நடைபெற்ற விரிவான ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

