திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் வாத்துகளுக்கு அடிக்கடி பறவைக் காய்ச்சல் நோய் பரவுகிறது. இது மனிதர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக இங்குள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் வாத்துகள், பறவைகள் கொல்லப்படுவது வழக்கம்.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிப்பாடு வழுதானம் அருகே உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் மடிந்துபோயின.
இதையடுத்து அங்குள்ள வாத்துகளின் ரத்த மாதிரிகள் சோதனை செய்து பார்க்கையில், எச்5 என்1 தொற்று வாத்துகளுக்குப் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கால்நடை பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் ஹரிப்பாடு வழுதானம் பகுதியில் உள்ள இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகளைக் கொல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து அப்பகுதி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்துப் பறவைகளையும் கொல்ல கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முதல் வாத்துகளைக் கொல்லும் பணி தொடங்கியது. வழுதானம் பகுதியில் வாத்துகள் உட்பட பறவைகளைக் கொண்டு வருவதற்கும், அங்கிருந்து வெளியூர்களுக்கு பறவைகளைக் கொண்டு செல்வதற்கும் தடைவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

