புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான காவல் சீருடை இருப்பது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு 'சிந்தனை முகாம்' என்ற பெயரில் ஹரியானாவின் சூரஜ்கண்ட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், கேரளா, அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் முதல்வர்கள், 16 மாநிலங்களின் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய பாதுகாப்பு முகமையின் ( என்.ஐ.ஏ) கிளைகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் இருந்தவாறு காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர், "அரசியல் சாசனப்படி சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், அது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் சேர்த்து பாதுகாப்பதையுமே குறிக்கிறது.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்புகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டியது முக்கியம். அதேபோல், அந்த அமைப்புகள் குறித்து பொதுமக்களின் பார்வையும் முக்கியம்.
பாதுகாப்புத்துறையில் சிறப்பாகச் செயல்படும் ஒரு மாநிலத்தை மற்ற மாநிலங்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டு அதைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இதன்மூலம் இந்தியா முழுதும் சட்டம், ஒழுங்கு சீரான முறையில் இருக்கும். நாட்டின் கடைக்கோடி மனிதனும் அதிகாரத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை உள்துறைக்கு இருக்கிறது.
குற்றங்கள் எப்போதுமே உள்ளூர் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை.
பல சமயங்களில் பல மாநிலங்கள், பல நாடுகள் தொடர்புடைய குற்றங்களைக் காணமுடிகிறது.
இதுபோன்று குற்றங்களைக் குறைப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே உறவும் ஒத்துழைப்பும் அவசியம். அதே போல் மத்திய அரசுடனும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
எனவே, தொழில்நுட்பங்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான நிதி உதவிக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்.
தீவிரவாதத்திற்கு எதிராகவும், நிதி மோசடி குற்றங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போலிச் செய்திகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். ஒரு தவறான செய்தி நாட்டில் மாபெரும் குழப்பத்தை உண்டு பண்ணி அமைதியைக் சீர்குலைக்கக் கூடும்.
அனைத்து வகையான தீவிரவாதமும் ஒடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம் என்பது துப்பாக்கி, பேனா என எந்த வடிவில் வந்தாலும் அது இளையர்களைத் தவறான பாதைக்கு இட்டுச்சென்று விடும். அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடி தன் காணொளி உரையில் மாநில உள்துறை அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டார்.

