பரபரப்பான விமான நிலையங்கள்
பட்டியலில் டெல்லி விமான நிலையம்
புதுடெல்லி: உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் 10வது இடம் பிடித்துள்ளது. விமானத் துறை ஆய்வு நிறுவனமான ஓஏஜி, உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2019 அக்டோபர் மற்றும் 2022 அக்டோபர் மாதங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை நிலவரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் அட்லாண்டா விமான நிலையம் உள்ளது.
துபாய் விமான நிலையம் 2வது இடத்திலும் தோக்கியோ ஹனேடா விமான நிலையம் 3வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் 14வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபரில் 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஏர்பஸ்
விமானத் தயாரிப்பு ஆலை
புதுடெல்லி: ஏர்பஸ் நிறுவனத்தின் சி295 ரக விமானங்கள் முதன் முறையாக ஐரோப்பாவுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ஆலை, பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைக்கப்படவுள்ளது. இதனை இந்திய பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
'ஏர்பஸ் சி295' போக்குவரத்து விமானத் தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
அருங்காட்சியகத்தில் ஒரே நாளில்
3,200க்கு மேற்பட்ட வருகையாளர்கள்
புதுடெல்லி: இந்தியாவின் பிரதமர்கள், தலைவர்கள் ஆகியோரின் சாதனை மற்றும் அதுகுறித்த ஆவணங்கள், தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகம் புதுடெல்லியின் தீன் மூர்த்தி சாலையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திறக்கப்பட்டது.
பிரதமர்கள், தலைவர்களின் சாதனைகளையும் அது குறித்த ஆவணங்களையும் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம், இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கலாம் எனும் நோக்கத்தில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த அருங்காட்சியகம் திறந்து ஐந்து மாதங்களில் 1,15,161 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
மேலும், சாதனை எண்ணிக்கையாக கடந்த அக்டோபர் 15ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3,233 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

