புதுடெல்லி: இந்தியா, சர்க்கரை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கும்.
இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் போதுமான அளவு சர்க்கரை இருப்பில் இருப்பதை உறுதி செய்யவும் சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப் பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் 2022 அக்டோபர் 31ஆம் தேதியைத்தாண்டி 2023 அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். இதர நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் மறு பரிசீலனை செய்யப் பட்டுத் தடை நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு விலக்கு
இது மட்டுமல்லாமல் சிறப்பு ஒப்பந்தங்களின் கீழ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பப்படும் சர்க்கரைக்கு இந்தத் தடை பொருந்தாது. உலக சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2022-23ஆம் சந்தை பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 36.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் சந்தை பருவத்தில் இந்தியா 35.8 மில்லியன் டன் சர்க்கரையை உற்பத்தி செய்தது.

