இந்தியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 140 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தின் மேற்க்கு பகுதியில் உள்ள மோர்பி நகரத்தில் திங்கள்கிழமை அன்று நடந்தது. தேடுதல் பணி தொடர்வதால், மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று நகரத்தின் காவல்துறைத் தலைவர் பி. தேகாவதியா கூறினார்.
அங்குள்ள மச்சு ஆற்றின்மீது அமைந்துள்ள அப்பாலம் இடிந்து விழுந்தபோது அதில் 150க்கும் மேற்பட்டோர் இருந்ததாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
இடிந்த விழுந்த பாலத்தை ஏறி, ஆற்றங்கரைக்கு வந்தடைய பாதிக்கப்பட்டவர்கள் முயன்றனர் என்று அங்கிருந்த பலர் கூறினர். குழந்தைகள் பாலத்திலிருந்து ஆற்றிற்குள் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
230 மீட்டர் நீளமுள்ள அந்த பாலம் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. ஆறு மாதங்களாக புதுப்பிப்புக்காக மூடப்பட்டு, கடந்த வாரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
இதற்கிடையில், தேடுதல் பணியில் உதவ தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் ஐம்பது கடற்படையினரும் 30 விமானப் படை வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்கம் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு திறந்துவிடப்படுவதற்கு முன்பு அரசாங்கம் அப்பாலம் தொடர்பில் முழுமையான சோதனையை நடத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த விபத்திற்கான காரணத்தை அறிய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாண்டோர் குடும்பங்களுக்கு தலா 600,000 ரூபாய் (S$10,300) அரசாங்கத்திலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

