ஸ்ரீநகர்: எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏராளமான பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக மத்திய உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அங்குள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில் தங்கியுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி முகாம்களில் உள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும் செயல்பாடுகளும் ஐம்பது விழுக்காடு அளவு அதிகரித்துள்ளது என்றும் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளும் அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாகவும் உளவு அமைப்புகள் கூறியுள்ளன.
காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரிப்பதற்கு முன்பாக இந்தியாவுக் குள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக அவை தெரிவித்துள்ளன.
"ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுடைய வீடுகள் தற்காலிக பயங்கரவாத முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அவர்களுக்குப் பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐ உளவுத்துறையும் பல்வேறு உதவிகளை அளித்து வருவது உறுதியாகி உள்ளது," என உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லையை ஒட்டியுள்ள மசில், கெரன், குரேஸ் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே இந்திய விமானப் படைகளுக்குத் தேவையான விமானங்களைத் தயாரிக்க ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை ஒன்று குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, இது விமான உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான மாபெரும் முயற்சி என்றார்.
"இந்தியா தற்சார்பு அடைவதில், பாதுகாப்புத் துறையும் விமான உற் பத்தி துறையும் இரு முக்கியத் தூண்களாகும். எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் உற்பத்தித் 25 பில்லியன் டாலரை (ரூ.2 லட்சம் கோடி) தாண்டும். இதற்கு உத்தரப் பிரதேசம், தமிழ்நாட்டில் நிறுவப்படும் பாதுகாப்பு வளாகங்கள் உதவி புரியும்," என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

