அகமதாபாத்: குஜராத் பாலம் விபத்துக்குள்ளான நிலையில், அது குறித்து நெஞ்சைப் பதற வைக்கும் தகவல்கள் பல வெளியான வண்ணம் உள்ளன.
சம்பவ பகுதிக்கு அருகே வசிக்கும் ரமேஷ் பாய் தாம் 15 சடலங்களை மீட்டதாக பிபிசி தமிழ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
"விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்றேன். அப்போது ஐம்பது பேர் பாலத்தில் தொங்கியபடி உயிருக்குப் போராடினர். அவர்களை மீட்க முடிந்தவரை உதவினேன்," என்றார் ரமேஷ் பாய்.
சுபாஷ் என்பவர் கூறுகையில், கையில் கிடைத்த நீளமான குழாய் ஒன்றின் உதவியோடு சில பெரியவர்களை மீட்டதாகவும் அதற்கு முன்னதாகவே சில சிறார்களைக் காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தொங்கு பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடந்து வருவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மற்றொருவர் கூறுகையில், ஏழு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தம் கண் முன்னே உயிரிழந்ததால் மனமுடைந்து போனதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு சிறுமியை மீட்டபோதிலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் தம் கண்முன்னே அவள் உயிரிழந்ததாகவும் மேலும் பல சிறார்கள் இறந்துபோனது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

