ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல்
சிம்லா: இமாசலப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை அடுத்து, அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் அங்குள்ள கங்க்ரா மாவட்டத்தில் காவல்துறை வாகனச் சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
நெல் ரகங்களில் அசோகச் சக்கரம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் ஒயிப்புரம்.
58 வயது விவசாயி யான இவர், தமது நிலத்தில் நான்கு நெல் ரகங்களைப் பயன் படுத்தி அசோகச் சக்கரத்தை (படம்) உருவாக்கி உள்ளார். இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆவலுடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
புத்தகப் பைக்கு ஒருநாள் விடுமுறை
பெங்களூரு: பள்ளி மாணவர்கள் புத்தக மூட்டையைச் சுமப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவில் மாதந்தோறும் ஒரு சனிக்கிழமையில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாணவர்களைப் பன்முகச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம், குடிமை உணர்வை வளர்ப்பதே முக்கிய நோக்கமாகும். இதுதவிர சுயவிளக்க பாடப் புத்தகங்களுடன் பத்து முக்கிய விஷயங்கள் குறித்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் என்றும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பசையாக மாற்றி தங்கம் கடத்தல்
திருவனந்தபுரம்: ஞாயிற்றுக்கிழமை வளைகுடாவில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த விமானப் பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டபோது, ஒரு கிலோ தங்கத்தை உருக்கி பசையாக மாற்றி கடத்தி வந்தவர் பிடிபட்டார். கொல்லம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற அந்தப் பயணி, தங்கப் பசையை தமது காலணிக்குள் மறைத்து வைத்திருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கத்தை நூதன முறையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

