தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐஃபோன் பாகங்களைத் தயாரிக்கும் ஆலையில் 45,000 ஊழியர்களைச் சேர்க்கும் டாடா

1 mins read
a83f6cc1-2c27-4716-a3f7-0c2a5fc0adcd
படம்: ராய்ட்டர்ஸ் -

டாடா குழுமம், தென்னிந்தியாவில் ஐஃபோன் பாகங்களை உற்பத்தி செய்யும் அதன் மின்னணுவியல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களைப் பன்மடங்காக்க திட்டமிட்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து கூடுதல் வியாபாரத்தைப் பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆள்சேர்க்கும் பணியில் டாடா ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் ஓசூர் நகரில் உள்ள அந்தத் தொழிற்சாலை, 18 முதல் 24 மாதங்களுக்குள் கூடுதலாக 45,000 மகளிர் ஊழியர்கள் வரை பணியில் சேர்க்கவிருக்கிறது.

தற்போது அந்தத் தொழிற்சாலையில் ஏறக்குதைய 10,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மகளிராவர்.

ஆப்பிள் நிறுவனம், சீனாவுக்கு அப்பால் அதன் விநியோகத் தொடரைப் பல்வகைப்படுத்தி வருகிறது. இதிலிருந்து பலனடைய முயற்சி எடுத்துவரும் இந்திய நிறுவனங்களில் டாடாவும் ஒன்று.

ஐஃபோன் மற்றும் அதன் பாகங்களில் சிறிய அளவு மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், கொவிட்-19 கட்டுப்பாடுகள், அமெரிக்கா உடனான பதற்றநிலை போன்றவற்றை சமாளிக்க சீனா தடுமாறிவரும் நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள இந்தியா முற்படுகிறது.

500 ஏக்கருக்குமேல் பரப்பளவைக் கொண்டுள்ள ஓசூர் ஆலை, கடந்த செப்டம்பரில் ஏறத்தாழ 5,000 மகளிரை வேலைக்கு அமர்த்தியது. பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்