புதுடெல்லி: காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லி வாழ் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் பனிமூட்டம் போல் அப்பகுதிகளை தூசிப்படலம் மூடியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்க டெல்லி மாநில அரசு தடை விதித்தது. அதையும் மீறி ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்ததை அடுத்து, உலகின் ஆக அதிக காற்று மாசு உள்ள நகரமாக டெல்லி மாறியது.
இந்நிலையில் அங்கு காற்று மாசு குறைவதாகத் தெரியவில்லை. நேற்று காற்றுத்தரக் குறியீடு டெல்லியில் 385 புள்ளிகளாகப் பதிவானது.
டெல்லியில் உள்ள திர்பூர் பகுதியில் காற்றுத்தரக் குறியீடு 594 புள்ளிகளாகவும் நொய்டாவில் 444 புள்ளிகளாகவும் பதிவாகி உள்ளது. இது காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டிப்பிடித்ததற்கான அடையாளம் ஆகும். இதனால் எதிரே இருப்பவர் யார் என்பது தெரியாத அளவுக்கு காற்று மாசு மோசமடைந்துள்ளது. வாகனங்களில் செல்வோர் தடுமாற வேண்டியுள்ளது.
இதையடுத்து, வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், நிலக்கரி ஆலைகளின் செயல்பாடு, விவசாய நிலங்களை எரிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 17 நிலக்கரி ஆலைகளும் உத்தரப் பிரதேசத்தில் 63 ஆலைகளும் மூடப்பட்டன.

