புதுடெல்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு முடியும் வரை இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக்கூடாது என திமுக உள்ளிட்ட சில தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என திமுக வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் உள்ள 232 மனுக்களில் அசாம், திரிபுரா மாநிலங்கள் தொடர்பாக 53 வழக்குகள் உள்ளன என்றும் அவை தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
திமுக தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் மூன்று வாரங்களுக்கு வழக்கின் சுருக்க வாதங்களைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சுருக்கமான வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நடவடிக்கைக்கு ஏதுவாக இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

