பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கும் அனைத்துலக முதலீட்டாளர்கள் மூன்று நாள் மாநாட்டின் தொடக்க நாளான நேற்று காணொளி வழியாக உரையாற்றிய பிரதமர் மோடி, "உலகளவில் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் இந்த நேரத்தில் இந்திய பொருளியல் வலுவாக இருப்பதை பார்த்து உலகமே நம் மீது நம்பிக்கை வைத்துள்ளது," என்றார்.
"இந்தியா உலகளாவிய உற்பத்தி சக்தியாக உருவாகி வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது என்பது ஜனநாயகத்தின் முதலீடு, உலகத்திற்கான முதலீடு.
"இந்தியாவில் அந்நிய முதலீடு களுக்கு கதவுகள் திறந்தே உள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
"துணிச்சலான சீர்திருத்தங்கள், பெரிய உள்கட்டமைப்பு வசதி, சிறந்த திறமைகளுடன் புதிய இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறோம். நாட்டின் முன்னேற்றத்திற்காக இதில் கவனம் செலுத்தப்படுகிறது. திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் உள்ள இடம் அது.
"இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியந்து பார்க்கிறது. இளைஞர்களின் திறனை கட்டுப்படுத்துவதில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கான சூழலை தருவோம்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன். பியூஷ்கோயல், பிரகலாத் ஜோஷி, ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

