ஹைதராபாத்: இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட், அடுத்த சில நாள்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற துளிர் ('ஸ்டார்ட் அப்') நிறுவனம் தயாரித்துள்ளது.
விண்வெளி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம், தனது முதல் ராக்கெட்டுக்கு 'விக்ரம்-எஸ்' எனப் பெயர் சூட்டி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 'இஸ்ரோ' ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் செலுத்தப்படும் என்றும் அதில் மூன்று தனியார் வாடிக்கையாளர்களின் பொருள்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' தெரிவித்துள்ளது.
எனினும், ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தும் நேரமும் நாளும் உறுதிபட அறிவிக்கப்படவில்லை. வானிலையைப் பொறுத்தே இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அநேகமாக நாளை மறுதினம் முதல் 16ஆம் தேதிக்குள் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இது இந்திய விண்வெளித் துறை சார்ந்த ஆய்வுப்பணிகளில் முக்கிய மைல்கல்லாக அமையும் என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய அரசு விண்வெளித் துறையை தனியாருக்குத் திறந்துவிடுவதாக அறிவித்தது.
இதையடுத்து, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

